வேலூரில் நளினியின் சிறை அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 22 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கபட்டு இருக்கிறார்.
சிறையில் செல்போன் வைத்திருந்ததாக கடந்த 2010 ஆம் ஆண்டு, நளினி மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த வழக்கின் விசாரணை, வேலூர் நடுவர் நீதிமன்றதில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்த வழக்குக்கு தடை விதிக்கக்கோரி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
‘‘கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் நான் செல்போன் பயன்படுத்தியதாகவும், அதனை பறிமுதல் செய்ய முயன்றபோது கழிவறையில் வீசி கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் என் மீது சிறை கண்காணிப்பாளர் புகார் செய்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த குற்றத்திற்கு எனக்கு அளிக்கப்பட்டிருந்த முதல் வகுப்பு சிறை அந்தஸ்தை குறைத்து ‘பி’ வகுப்பு சிறைக்கு மாற்றி விட்டனர்.
அந்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் என் மீது புகார் செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு குற்றத்திற்கு 2 முறை தண்டனை விதிக்க முடியாது. எனவே வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடக்கும் விசாரணையை நிறுத்த உத்தரவிடவேண்டும்” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. நளினியின் மனுவை ஏற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.