Home / சினிமா / திரை செய்தி / நடிகை சவுந்தர்யா சொத்து பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு…

நடிகை சவுந்தர்யா சொத்து பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு…

விமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யாவின் சொத்து பங்கீடு தொடர்பாக, பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டது. 9 ஆண்டுகாலமாக நீடித்த இழுபறிக்கு தீர்வு கிடைத்ததை அடுத்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சவுந்தர்யா. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 2004ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாக, மைசூரில் பிரசாரம் செய்வதற்காக ஜக்கூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டார்.

சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறியதில் சவுந்தர்யா, அவரது அண்ணன் அமர்நாத் ஆகியோர் பலியாகினர். சவுந்தர்யா இறப்புக்கு பிறகு அவரது சொத்துகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த 2003ம் ஆண்டு பிப்.15ம் தேதி சவுந்தர்யா எழுதி வைத்த உயில் கிடைத்தது. இதில், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகள், அவரது தாய் மஞ்சுளா, கணவர் ரகு, அண்ணன் அமர்நாத், அவரது மனைவி நிர்மலா, மகன் சாத்விக் ஆகிய 5 பேருக்கும் பிரித்து வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
saundaryaaka,
ஆனால், யாருக்கு எந்த சொத்து பகிர்ந்தளிப்பது என்று அதில் குறிப்பிடாததால் குடும்பத்தினரிடம் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், அமர்நாத் மனைவி நிர்மலா, மகன் சாத்விக் ஆகியோர், சவுதர்யாவின் சொத்துகளை அபகரிக்கும் வகையில் போலி பத்திரம் தயாரித்திருப்பதாக, கடந்த 2009ம் ஆண்டு பெங்களூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மஞ்சுளா, ரகு ஆகியோர், வழக்கு தொடர்ந்தனர்.

மேலும், சொத்து கேட்டதால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மற்றொரு வழக்கையும் தொடர்ந்தனர். இந்த வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த சொத்து பிரச்னையை, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, சமீபத்தில் வக்கீல் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், சவுந்தர்யா பெயரில் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்கம், பெங்களூர் அனுமந்த் நகரிலுள்ள 2 வீடுகள் மற்றும் 3 வணிக வளாகம் ஆகியவை அமர்நாத் மகன் சாத்விக்கும், வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.1 கோடியே 25 லட்சம் ரொக்க பணம் அண்ணி நிர்மலாவுக்கும் பங்கீடு செய்யப்பட்டது.

மேலும், அமர்நாத் பெயரிலுள்ள விளைநிலம், அவரது மனைவி நிர்மலா, தாய் மஞ்சுளா, மகன் சாத்விக் ஆகியோருக்கு சம பங்காகவும், சவுந்தர்யா- அமர்நாத் பெயரிலுள்ள கூட்டு சொத்து தாய், மனைவிக்கு சம பங்காக பிரிக்கவும், மல்லேஸ்வரம் ஆர்எம்வி இரண்டாவது ஸ்டேஜ் அபார்ட்மென்ட், ஐதராபாத்திலுள்ள அலுவலகம், பெங்களூர் எச்ஆர்பிஆர் லே-அவுட் வீடு ஆகியவை, கணவர் ரகுவுக்கு பங்கீடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சொத்துகளை பிரித்து வக்கீல் மூலம் பதிவு செய்து பத்திரம் தயாரித்தனர். சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததால், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைத்ததால் குடும்பத்தார் நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply

Scroll To Top