Home / செய்திகள் / இலங்கை / யாழ்.பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கைதில் முடிவடைந்துள்ளது.

யாழ்.பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கைதில் முடிவடைந்துள்ளது.

jaffna student protestயாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத 15 பேர் கொண்ட கும்பலினால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத கும்பல் நுண்கலைப்பீட வளாகத்தில் வைத்து மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகினார்கள்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்ய தயக்கம் காட்டி வந்த நிலையில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் இன்று காலை 10 மணியிலிருந்து சுமார் ஒரு மணித்தியால கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

இன்று காலை ஆரம்பமாகிய இப் போராட்டத்தில் திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே, பொலிசே மாணவரை பொங்க வைக்காதே, பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகள் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை மாணவர்கள் ஒரு புறம் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் கல்வி பயின்று வரும் 3ம் வருட மாணவர்கள் ஐந்து பேரை சந்தேகத்தின் பெயரில் காவல்துறை   கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் ஐந்து பேரும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது . கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணமேதுமற்று மாணவர்கள் மீது இனம்தெரியாத கும்பல் தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாமல் இந்த தாக்குதலை கண்டுகொள்ளாமல் விட்ட சிங்களகாவல்துறையினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்தவித நீதியும் கிடைக்காமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை காவல்துறை கைதுசெய்து இன்னும் தமிழ்மாணவர்கள் மீது மிலேச்சத்தனத்தை மேற்கொள்ளுகின்றது. இந்த சம்பவங்கள் இன்னும் மாணவர்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டும் செயற்பாடாகவே அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Scroll To Top