Home / செய்திகள் / இலங்கை / இராணுவத்தினரின் கூட்டத்துக்கு சமுகமளிக்காத முன்னாள் போராளிக்கு பதிலாக, அவரது தந்தையை இழுத்துச்சென்றது இராணுவம்!

இராணுவத்தினரின் கூட்டத்துக்கு சமுகமளிக்காத முன்னாள் போராளிக்கு பதிலாக, அவரது தந்தையை இழுத்துச்சென்றது இராணுவம்!

sivamokanஇராணுவத்தினரின் கூட்டத்துக்கு சமுகமளிக்காத முன்னாள் போராளிக்கு பதிலாக, அவரது தந்தையை இழுத்துச்சென்றது இராணுவம்! வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கண்டனம். தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரையும், இன்று இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு படைத்தரப்பால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு நேற்று முந்தினமும் நேற்றும் (23-24.03.2014) சென்ற இராணுவத்தினர், முன்னாள் போராளிகளை இன்று (25.03.2014) காலை 8.00 மணிக்கு அனிஞ்சியன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு வலியுறுத்தியிருந்தனர்.
முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்குச்சென்று, இன்றைய கூட்டத்துக்கு வருமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியபோது, அதற்கு அவர், “நாளை அதாவது இன்று தனக்கு கிளினிக் இருப்பதாகவும் அதற்கு செல்ல வேண்டும்.” எனவும் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த இராணுவத்தினர், “எங்க நீ சொல்வது உண்மையென்றால் மெடிக்கல் றிப்போட்டை காட்டு” என மிரட்டியுள்ளனர். குடும்பஸ்தர் மெடிக்கலை காட்டிய போதும், “இதெல்லாம் இப்ப முக்கியமில்ல. நாளைக்கு கட்டாயம் நீ கூட்டத்துக்கு வரணும்” என்று கடுமையாக எச்சரித்து விட்டுப்போயுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை குறித்த குடும்பஸ்தர், இராணுவத்தினரின் கூட்டத்துக்கான அழைப்பை கவனத்தில் கொள்ளாமல், தனது உடல் நலம், மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யாழ்ப்பாணம் கிளினிக்குக்காக சென்றுள்ளார். இதையறிந்த இராணுவத்தினர் இன்று காலை குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குச்சென்று, “நேற்று வந்து அவ்வளவு தெளிவா திருப்பி திருப்பி சொல்லிட்டுப்போயும் கூட்டத்துக்கு வராமல் கிளினிக் போய்யிருக்கிறது. என்ன எங்களுக்கே விளையாட்டு காட்டிறீயளா? என்று மரியாதைக்குறைவாகவும் தூசன வார்த்தைகளாலும் கடுமையாக ஏசிவிட்டு, முன்னாள் போராளியின் தந்தையை வீதி வழியே இழுத்துச்சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தினால் கடும் உடல் உள பாதிப்புகளுக்கு உட்பட்டும், உடலில் எறிகணைச்சிதல் துண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் சுமந்து கொண்டும் நித்தமும் வலிகளோடும், அவ்வளவு இலகுவில் வார்த்தைகளால் சொல்லி விட முடியாத அவஸ்தைகளோடும், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் தொடர்ந்தும் உயிர் வாழ முடியாத நிச்சயமற்ற தன்மையோடு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர்.

இன்றுவரை இவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை வசதிகளையோ, மனிதாபிமான அடிப்படையிலான மருத்து வசதிகளை செய்து கொடுக்காத படு பாதகமான இந்த நயவஞ்யக அரசு, கிரமமாக தொடரும் மக்களின் மருத்துவ கிளினிக்கு கூட செல்ல விடாமல் தடுத்து, தாம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனப்பணிப்பது மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுடன் தொடர்புடைய பாரதூரமான விடையமாகும். இவ்விடையம் தொடர்பில் மனித உரிமை விவகாரங்களில் கவனமும் ஆர்வமும் செலுத்தும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் வலுத்தீவிரமாக எதிர்வினையாற்றி, மனித உரிமைகளை பாதுகாக்க கடுமையாக உழைக்க வேண்டுமெனவும், அநீதிகளுக்கு எதிராகவும், மனித உரிமை மீறல்கள், அவமதிப்புகளுக்கு எதிராகவும் மிகப்பலமாக குரல் உயர்த்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Scroll To Top